சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா, சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முன்னதாக 104ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டு இடங்கள் பின்தங்கி 106ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய அணி சமீபத்தில் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் கத்தார் அணிக்கு எதிராக கோல் ஏதுமின்றியும், வங்கதேச அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் டிராவும் செய்தது. இதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்தப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதே வேளையில் வங்கதேச அணி மூன்று இடங்கள் முன்னேறி 184ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ஃபிபா தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ் (2ஆவது இடம்), பிரேசில் (3ஆவது இடம்) ஆகிய அணிகள் உள்ளன. முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளில் உருகுவே, குரோஷியா, அர்ஜென்டினா ஆகிய அணிகள் தலா ஒரு இடம் முன்னேறி முறையே ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் உள்ளன.
மேலும் மூன்று இடங்கள் முன்னேறிய உக்ரைன் 22ஆவது இடத்தையும் ஜப்பான் 28ஆவது இடத்தையும் பிடித்தன. நான்கு இடங்கள் முன்னேறிய துருக்கி அணி 32ஆவது இடத்தையும், ஐந்து இடங்கள் முன்னேறிய ரஷ்ய அணி 37ஆவது இடத்தையும் பிடித்தன.