இந்தியா - ரொமேனியா அணிகளுக்கு இடையில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டி துருக்கியில் நடந்தது. இதில் இந்திய அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் இந்திய அணி கோல் போடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் வீணடித்தது. பின்னர் 40ஆவது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடிக்க, பதிலுக்கு ரோமேனியாவின் பொரோடி கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். அதன்பிறகு முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில், 57ஆவது நிமிடத்தில் இந்திய அணி இரண்டாவது கோலை அடிக்க, அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சுனிதா 63ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து 3-1 என்று முன்னிலையை ஏற்படுத்தினார். ஆனால் இதன்பின் ரொமேனியா அணி, 78ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், அடுத்த 7 நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி மூன்றாவது கோலையும் அடித்து 3-3 என்ற நிலைக்கு வந்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் மாரியம்மாள் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது.
இதையும் படிங்க: ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்!