உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, இந்தியாவில் மட்டும் தற்போது வரை 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தொற்றை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது.
வேகமாகப் பரவிவரும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கொரோனா வைரஸால் சர்வதேச அரங்கில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ஐ லீக் கால்பந்து போட்டிகள் ரசிகர்களின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ஆம் தேதிவரை நடைபெறவிருந்த அனைத்து ஐ லீக் கால்பந்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 16 லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், மோகன் பகான் அணி 39 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையும் படிங்க: 'வரும் முன் காப்போம்' - கொரோனா குறித்து கோலி ட்வீட்!