கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், ஒருசில சமயங்களில் எதிரணி வீரர்கள் பந்தை தடுக்க முயலும் போது வீரர்களுக்கு விபத்து நேரிடுகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் நடைபெற்றுவரும் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் என்ட்ராச்ட் ஃப்ராங்ஃபர்ட் வீரர் அணியின் நடுகள வீரர் மிஜாத் கசினோவிக்கிற்கு (Mijat Gacinovic), ஷால்கே அணியின் கோல்கீப்பரால் ஏற்பட்ட காயம் ரசிகர்களை பதபதக்கை வைத்துள்ளது.
ஜெல்சென்கிர்சென் (Gelsenkirchen) நகரில் நடைபெற்ற நடப்பு சீசன் பண்டஸ்லிகா தொடரின் லீக் போட்டியில் ஷால்கே (Shalke) அணி 1-0 என்ற கோல் கணக்கில் என்ட்ராச்ட் ஃப்ராங்ஃபர்ட் (Eintracht Frankfurt) அணியை வீழ்த்தியது. 53ஆவது நிமிடத்தில் ஷால்கே வீரர் பெனிடோ ராமன் கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 66ஆவது நிமிடத்தின் போது என்ட்ராச்ட் ஃப்ராங்ஃபர்ட் அணியின் நடுகள வீரர் மிஜாத் கசினோவிக் கோல் அடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தார். அப்போது, ஷால்கே அணியின் கோல்கீப்பர் அலெக்ஸ் நுபேல் திடீரென ஓடிசென்று பந்தை அடிப்பதற்கு பதில் மிஜாத் கசினோவிக்கின் நெஞ்சை தாக்கிவிட்டார்.
இதனால், நடுவர் ஃபெலிக்ஸ் ஸாவ்லர் அலெக்ஸ் நுபேலுக்கு ரெட் கார்ட் தந்து ஆட்டத்திலிருந்து வெளியேற்றினார். அலெக்ஸ் நுபேல் மிஜாத்தை தாக்கிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தான் மிஜாத் கசினோவிச்சிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக அலெக்ஸ் நுபேல் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மிஜாத் தான் நலமாக இருப்பதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் மிஜாத்தின் நெஞ்சில் அலெக்ஸ் நுபேலின் கால்தடம் பதிந்திருந்தது. இச்சம்பவம் கிட்டத்தட்ட 1982இல் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது பிரான்ஸ் வீரர் பாட்ரிக் பெட்டின்சனை ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் ஹரால்டு டோனி ஷுமேக்கர் தாக்கியது நினைவுக்கு வந்ததாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோபத்தில் எதிரணி பயிற்சியாளரை கீழே தள்ளிவிட்ட கால்பந்து வீரர்