இந்தியாவில் கால்பந்து போட்டி என்பது பெரிய அளவில் கொண்டாடப்படாவிட்டாலும் கால்பந்து போட்டிகளுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இங்குள்ளது. நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மட்மே ஐ-லீக், ஐஎஸ்எல் போன்ற கால்பந்து தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால் இதுபோன்ற தொடர்கள் பல ஆண்டுகளாகவே ஸ்பெயின், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டுவருகிறது.
இந்தப் போட்டிகளுக்கென்று இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் நள்ளிரவில் நடைபெறும் போட்டிகளைக் கூட இணையம் மூலமாக கண்டு தங்களின் ஆதரவை அளித்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய ரசிகர்கள் தங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கு ஜெர்மனைச் சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணியான பேயர்ன் முனிச், தங்களது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தமிழிலில் நன்றி என பதிவிட்டிருந்தனர். மேலும் அந்தப் பதிவின்கீழ் இது சரியாக எழுதப்பட்டுள்ளதா என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதைப் பார்த்த தமிழ்நாட்டு கால்பந்து ரசிகர்கள் இதை சேர் செய்யத் தொடங்கியதோடு அந்த அணிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டனர். இதேபோன்று பேயர்ன் முனிச் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்து அந்த நாடுகளில் பேசப்படும் தாய் மொழியில் நன்றி பதிவிட்டிருந்தனர்.
பேயர்ன் முனிச் அணி ஜெர்மனில் நடத்தப்படும் உள்நாட்டு கால்பந்து தொடரான பண்டஸ்லிகா தொடரில் 28 முறை சாம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளது. பலம் வாய்ந்த அணியான பேயர்ன் முனிச், பண்டஸ்லிகா நடப்பு சீசனில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.