பெர்லின்: பன்டஸ்லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் எஸ்.சி. ஃப்ரெய்பர்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் என்ட்ராச்ட் ஃப்ராங்ஃபர்ட் அணியை வீழ்த்தியது.
கால்பந்து போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால், சில சமயங்களில் வீரர்களுக்கும் எதிரணி பயிற்சியாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது விஸ்வரூபம் எடுக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் பன்டஸ்லிகா கால்பந்துத் தொடரில் நடைபெற்றுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்றுவரும் பன்டஸ்லிகா கால்பந்துத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் எஸ்.சி. ஃப்ரெய்பர்க் (SC Freigburg) - என்ட்ராச்ட் ஃப்ராங்ஃபர்ட் (Eintracht Frankfurt) அணிகள் மோதின. இதில், ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் எஸ்.சி. ஃப்ரெய்பர்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில் எஸ்.சி. ஃப்ரெய்பர்க் வீரர்களால் தடுக்கப்பட்ட பந்து அந்த அணியின் Dugout பக்கம் சென்றது. அப்போது பந்தை எடுக்கச் சென்ற என்ட்ராச்ட் அணியின் கேப்டன் ஆப்ரகாம், ஓரத்தில் நின்றுகொண்டிருந்த எஸ்.சி. ஃப்ரெய்பர்க் அணியின் பயிற்சியாளர் 54 வயது நிரம்பிய கிறிஸ்டியனை வேண்டுமென்றே கீழே தள்ளிவிட்டார்.
இதைப் பார்த்த எஸ்.சி. ஃப்ரெய்பர்க் அணியின் சக வீரர்களும் களத்தில் புகுந்து ஆப்ரகாமை சுற்றிவளைத்ததால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. ஒழுங்கினமாக நடந்துகொண்டதால் ஆப்ரகாமிற்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார்.
அதேசமயம், ஆப்ரகாமை சுற்றிவளைத்தபோது அவரை முரட்டுத்தனமாக பிடித்த எஸ்.சி. ஃப்ரெய்பர்க் வீரர் க்ரிஃபோவுக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டது. பந்தை எடுக்கச் சென்றபோது எஸ்.சி. ஃப்ரெய்பர்க் அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டியன், ஆப்ரகாமை தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.