ஸ்பெயின் நாட்டின் மலகா மாகாணத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ கார்சியா. 21 வயதான இவர், 2016ஆம் ஆண்டிலிருந்து மலகா கால்பந்து கிளப் அணியைச் சேர்ந்த அத்லெடிகோ போர்தடா அல்டா (Atletico Portada Alta) ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்துவந்தார்.
கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால் அவருக்கு கரோனா வைரஸ் பரவி இருக்குமா என்ற அச்சத்தில் மலகாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது மட்டுமின்றி ரத்த புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக, அத்லெடிகோ போர்தடா அல்டா அணி தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் கரோனா வைரஸால் இதுவரை 309 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், மலகா மாகாணத்திலிருந்து மட்டுமே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை வயதானவர்களே உயிரிழந்து வந்த நிலையில், தற்போது 21 வயது கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கு கரோனா பரவுமா?