இந்திய கால்பந்து அணி 1950,60களில் ஆசிய அளவில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. அதற்கு சுனி கோஸ்வாமியின் கேப்டன்ஷிப்பிம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவரது தலைமையிலான இந்திய அணி 1962 ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியது. அதன்பின், 1964ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் கால்பந்து மட்டுமின்றி பெங்கால் அணிக்காக முதல் தர போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கால்பந்து வீரராக இவர் 1956 முதல் 1964ஆம் ஆண்டுவரை இந்தியாவுக்காக 50 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ லீக் போட்டிகளில் மோகன் பகான் அணிக்காகவும் ஆடியுள்ளார். அதேபோல் 1962 முதல் 1973ஆம் ஆண்டுவரை பெங்கால் அணிக்காக 46 முதல் தர ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்கோளறால் அவதிபட்டு வந்த அவர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
மறைந்த சுனி கோஸ்வாமிக்கு சுதிப்தோ என்ற மகன் உள்ளார். இந்திய கால்பந்து வரலாற்றில் ஜாம்பவானாக திகழ்ந்த சுனி கோஸ்வாமியின் மறைவுக்கு, இந்திய கால்பந்து சம்மேளனம், முன்னாள் கேப்டன் பூட்டியா, சுனில் சேத்ரி உள்ளிட்ட வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் விளையாடியதில் இவரே சிறந்த வீரர் - சாங்தே!