ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஸ்லாத்தன் இம்ராகிமோவிச். தற்போது 38 வயதாகும் இவர், இதுவரை பல்வேறு கிளப் அணிகளுக்காக களமிறங்கி 500-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். இதில், ஸ்வீடன் அணிக்காக 116 போட்டிகளில் களமிறங்கி 62 கோல்களையும் அடித்திருக்கிறார். சிறந்த ஸ்ட்ரைக்கரான இவருக்கு மால்மோ கிளப் அணி சார்பில் அந்நகரில் உள்ள மைதானத்தில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இம்ராகிமோவிச் சமீபத்தில் மால்மோ அணியின் பரமவைரியாகப் பார்க்கப்படும், ஸ்வீடனின் மற்றொரு கிளப் அணியான ஹாமர்பை கிளப்பின் பங்குகளில் சிலவற்றை வாங்கினார். இது மால்மோ ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால் அவர்கள் மால்மோ கால்பந்தாட்ட மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள இம்ராகிமோவிச்சின் சிலையை உடைக்க முயன்றனர். அப்போது அந்தச் சிலையின் மூக்குப் பகுதி சேதமடைந்தது.
முன்னதாக தனது கால்பந்தாட்ட பயணத்தை மால்மோ அணியிலேயே தொடங்கிய இம்ராகிமோவிச், பின்னர் 2001ஆம் ஆண்டு அந்த கிளப்பிலிருந்து வெளியேறி அயாக்ஸ் அணியில் சேர்ந்தார். அதன்பின் யுவண்டஸ், இண்டர் மிலன், பார்சிலோனா, ஏசி மிலன், பாரிஸ் செயின்ட்-ஜெர்மயின், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட அணிகளிலும் விளையாடினார்.
இறுதியாக அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த எல்ஏ கேலக்ஸி கிளப் அணிக்காக விளையாடினார். சமீபத்தில் அந்த அணியிலிருந்து வெளியேறிய இம்ராகிமோவிச், மீண்டும் சொந்த ஊர் அணிக்குத் திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் எதிரணியின் பங்குகளை வாங்கினர்.
இதன் காரணமாகவே இந்தச் சிலை உடைப்பு சம்பவம் நடைபெற்றது. இதுதவிர ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள இம்ராகிமோவிச்சின் வீட்டையும் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வான தோனி..!