ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்று வரும் ஒடிசா எஃப்சி அணி நடப்பு சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி, நான்கு தோல்வியையும், ஒரு போட்டியை டிராவிலும் முடித்து, புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒடிசா எஃப்சி அணியின் கோல் கீப்பரான அர்ஷ்தீப் சிங், நடப்பு தொடரில் பலமுறை எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளை தகர்த்து அணிக்கு தனது பங்களிப்பைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஈடிவி பாரத்துடன் பிரத்தேக உரையாடலில் பேசிய அர்ஷ்தீப் சிங், நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய உத்வேகத்துடன், ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அர்ஷ்தீ சிங் உடனான பிரத்தேக உரையாடல் இதோ..,
கேள்வி: உங்களது தனிப்பட்ட செயல்திறன் இந்த சீசனில் ஒடிசா அணிக்கு பெரும் பலமாக அமைந்து வருகிறது. அதிலும் கோவா அணியின் மெண்டோசா அடித்த பந்தை நீங்கள் லாவகமாக பிடித்திருந்தீர்கள். அப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
அர்ஷ்தீப் சிங்: முதலில் உங்களது பாராட்டுகளுக்கு எனது நன்றி. நான் ஒரு கோல் கிப்பராக சிறந்து விளங்குவதற்கு, நாள்தோறும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் அதனையே செய்ய விரும்புகிறேன். அதிலும் ரோஜெரியோ ராமோஸ் மற்றும் ஜெர்ரி பெய்டன் போன்ற அனுபவமிக்க பயிற்சியாளர்களிடம் நான் எடுத்து வரும் பயிற்சியே எனது சிறப்பான ஆட்டத்திற்கு காரணம்.
கேள்வி: ஸ்டூவர்ட் பாக்ஸ்டர், ஸ்டீவன் டெய்லரின் தலைமையின் கீழ் உங்களது அணி எவ்வாறு செயல்படுகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
அர்ஷ்தீப் சிங்: இந்த தொடரில் இடம்பெற்ற தலைசிறந்த பயிற்சியாளர்களில் ஸ்டூவர்ட் பாக்ஸ்டரும் ஒருவர். அவரது யுக்திகளும், யோசனைகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவர் ஒருபோது எங்கள் அணியை கைவிடமாட்டார். மேலும் இந்த தொடரில் எங்கள் அணியை முன்னேற்ற அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
ஸ்டீவன் டெய்லர் ஒரு சிறந்த கேப்டன். போட்டியின் போதும், போட்டி முடிவுக்கு பின்னும் அவரது தலைமை பண்பு ஆச்சரியமாகவுள்ளது. அவர் அணியில் உள்ள அனைவரையும், குறிப்பாக இளைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார். மேலும் அவரது அனுபவம் அணிக்கும் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
கேள்வி: அணியின் பயிற்சிகள் எவ்வாறு செல்கிறது?
அர்ஷ்தீப் சிங்: இந்த சீசனில் எங்களது முதல் வெற்றியை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வீரரும் 100 விழுக்காடு உழைத்து வருகின்றனர். மேலும் அதற்காக முழு உத்வேகத்துடனும், ஆவலுடனும் எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி: ஒடிசா இப்போது கிட்டத்தட்ட ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் கீழே உள்ளது. உங்கள் அணி எங்கே தவறு செய்கிறது என்பதை உணர்கிறீர்களா?
அர்ஷ்தீப் சிங்: நாங்கள் எந்த துறையிலும் தவறு செய்யவில்லை என நினைக்கிறேன். இருப்பினும் நாங்கள் இன்னும் அதிக கவனத்துடன் இனி வரும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால் நாங்கள் எங்களது பயிற்சி நேரத்தை அதிகரித்துள்ளோம். மேலும் எங்கள் அணியின் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம், என்றார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: அடுத்தடுத்து கோல்களை அடித்த சாந்தனா; ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது ஹைதராபாத்!