ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மகளிர் அண்டர் 16 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள், தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருக்கும் 'வடகொரியா அண்டர் 16' அணியானது - 'சீனா அண்டர் 16' அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வட கொரிய அணி வீரர்கள், தங்களது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை நிலைகுலைய வைத்தனர். பின்னர் ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் வட கொரிய அணியின் சுங் மை கிம் (chung mi kim) கோல் அடித்து அணியின் கோல் கணக்கைத் துவங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் யூ ஜாங் மியோங்(yu jong myong), 60ஆவது நிமிடத்தில் பொம் ஹ்யங் சின்(pom hyang sin) மற்றும் ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் சாங் ஒக் ஹாங் ஆகிய வடகொரிய அணி வீரர்கள் அதிரடியாக கோலடித்து அசத்தினர்.
ஆனால், இறுதி வரை போராடிய சீன அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் வட கொரிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் சீன அணியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளது.