கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான டோட்டன்ஹோம் கிளப்பின் செர்ஜ் ஆரியர் தனது இன்ஸ்டாகிராமில் காணொலி ஒன்றைப் பதிவிட்டார். அதில் ஆரியர், தனது சக அணி வீரர்களுடன் அரசு அறிவுறுத்திய சமூக விலகலை அவமதிக்கும் வகையில் அருகருகே அமர்ந்து விளையாடுவது போல் அமைந்திருந்தது. ஆனால் ஆரியர் உடனடியாக அக்காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
இதனையடுத்து ஆரியர், சிசோகோ இருவரும் இணைந்து எங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து இருவரும் கூறுகையில், "உலகம் முழுவதும் உள்ள மக்கள் கரோனாவால் அவதிப்பட்டு வரும் நிலையில், கால்பந்து வீரர்களாகிய நாங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்கு மாறாக நாங்கள் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்.
இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுறுத்திய ஆலோசனைகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். இந்நேரத்தில் பொதுமக்களுக்காக உழைத்துவரும் மருத்துவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் முயற்சிகளுக்காக எங்களால் இயன்ற நிதியை நன்கொடையாகவும் அளிக்கிறோம்", என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா: மைதானத்தின் பெயர் உரிமத்தை விற்கும் பார்சிலோனா!