சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சீனாவில் அந்த வைரஸின் பாதிப்பு குறைந்திருந்தாலும், இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வேகமாக பரவிவருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், கோவிட் -19 வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்யும் விதமாக, தாங்கள் 2.5 மில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் 20 கோடி) நன்கொடை வழங்கவுள்ளதாக ஜெர்மன் தேசிய கால்பந்து வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் மானுவல் நியூயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாார். அதில், "இதுபோன்ற கடினமான நேரங்களில் நாம் ஒருவரை ஒருவர் அக்கறையுடன் பார்த்துகொள்ள வேண்டும்.
தேசிய அணியில் உள்ள நாங்கள், நல்ல நோக்கத்திற்காக 2.5 மில்லியன் யூரோக்களை நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளோம்" என பேசினார். முன்னதாக, கோவிட் -19 வைரஸ் தொற்றால் வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிளப் உலகக்கோப்பை போட்டிகளை ஒத்திவைத்த ஃபிஃபா!