ஐ.எஸ்.எல் கால்பந்து ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் சிறிய இடைவேளை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வரும் சனிக்கிழமை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. சனிக்கிழமை பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதனிடையே இப்போட்டியை காண வரும் மேக்னா என்ற ரசிகை ஒருவர் ட்விட்டரில், பெங்களூரு அணி நிர்வாகத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒரு பதிவிட்டார். அந்தப் பதிவில் அவர், நான் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு மீண்டும் உபயோகிக்கக் கூடிய தண்ணீர் பாட்டிலில் வெந்நீர் எடுத்துவர எனக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புண்டா? நான் தற்போது 33 வாரகாலம் கர்ப்பிணியாக உள்ளேன். இதனால் நான் மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த முறை நான் போட்டியைக் காண வந்தபோது மிகவும் சிரமம் அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.
இந்த கர்ப்பிணி ரசிகையின் பதிவைக் கண்ட பெங்களூரு அணி நிர்வாகம், மேக்னா, நீங்கள் உங்களுடைய குழந்தையை அறிமுகப்படுத்தியதை நாங்கள் விரும்புகிறோம். சனிக்கிழமை நடைபெறும் போட்டிளை நீங்கள் அணியின் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அறையிலிருந்து பார்க்கலாம். அங்கு அதிகமான வெந்நீரும் பிற வசதிகளும் இருக்கும் என பதிவிட்டிருந்தது. பெங்களூரு அணி தனக்கு அளித்த வாய்ப்புக்கு அந்த பெண் ரசிகை நன்றி என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
வெந்நீர் கொண்டுவர அனுமதி கேட்ட பெண்ணுக்கு முதலாளிகள் பயன்படுத்தும் அறையில் அமர்ந்து போட்டியை பார்க்க வாய்ப்பு வழங்கிய பெங்களூரு அணியை ட்விட்டர்வாசிகள் புகழ்ந்து தள்ளினர்.
நடப்பு சீசனில் பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று டிரா என ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக உள்ளூர் மைதானத்தில் விளையாடிய போட்டியில் சென்னையின் எஃப்.சி. அணியை 3-0 என வீழ்த்தியிருந்தது. எனவே மீண்டும் அதே உத்வேகத்துடன் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.