2019ஆம் ஆண்டுக்கான கோபா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை எதிர்த்து வேலன்சியா அணி விளையாடியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பார்சிலோனா அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோல் அடிக்கத் தவறியது.
சரியான நேரத்திற்காக காத்திருந்த வேலன்சியா வீரர்கள் 21ஆவது நிமிடத்தின்போது கிடைத்த வாய்ப்பை யாரும் எதிர்பாராத வகையில் பந்தை கொண்டு கோல் போஸ்ட்டுக்கு அருகே சென்றனர். இதனை நன்றாகப் பயன்படுத்திய அந்த அணியின் கெவின் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து உற்சாகமான வேலன்சியா அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் தங்களது கால்களில் வைத்துக்கொண்டனர். தொடர்ந்து 33ஆவது நிமிடத்தில் வேலன்சியா அணியின் ரோட்ரிக்கோ இரண்டாவது கோலை அடிக்க வேலன்சியா அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனையடுத்து முதல்பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கிடைத்த வாய்ப்பினைத் தவறவிடுவதை தொடர்ந்தனர். பின்னர் 72ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
தொடர்ந்து கோல் அடிக்க முயன்ற பார்சிலோனா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை வேலன்சியா அணி வீரர்கள் தடுத்தனர். இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவில் வேலன்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோபா டெல் ரே கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.