கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, லா லிகா கால்பந்து தொடர் தற்போது மீண்டும் ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் உலகின் நட்சத்திர வீரரும், பார்சிலோனா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி காயம் காரணமாக பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து பார்சிலோனா அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுமுறைக்கு பின் பார்சிலோனா அணிவிரர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன்5) பயிற்சிக்கு திரும்பினர். பயிற்சியின் போது அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி காயமடைந்தார். தற்போது அவர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தேவையற்ற அபாயங்களை தவிர்க்க, அவர் குறிப்பிட்ட சில பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார். இதனால் சில நாள்களில் அவர் மீண்டும் தனது சக வீரர்களுடன் பயிற்சிக்கு திரும்புவார்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் தொடங்கவுள்ள லா லிகா தொடரின் முதல் போட்டியிலேயே பார்சிலோனா அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.