நடப்பு சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதன் நாக் அவுட் போட்டியின் முதல் சுற்றில் அத்லெடிக்கோ மாட்ரிட் - நடப்பு சாம்பியன் லிவர்பூல் ஆகிய அணிகள் மோதின.
இப்போட்டி அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் சொந்த மைதானமான மாட்ரிட்டில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் அத்லெடிக்கோ மாட்ரிட் அணிக்கு கார்னர் கிக் வழங்கப்பட்டது. அப்போது லிவர்பூல் அணியின் டிஃபெண்டர்கள் பந்தை தடுக்கத் தவறியதால் அதனைப் பயன்படுத்திக் கொண்ட அத்லெடிக்கோ மாட்ரிட் வீரர் சவுல் நிகாஸ் கோலாக மாற்றினார்.

இதைத்தொடர்ந்து, லிவர்பூல் அணி பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடினாலும் அவர்களால் அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் டிஃபெண்டர்களை கடந்து கோல் அடிக்க முடியவில்லை. லிவர்பூல் அணி எட்டு ஷாட்டுகளை அடித்திருந்தும் அவை எதுவும் ஆன் டார்கெட்டுக்கு செல்லவில்லை.
இறுதியில், அத்லெடிக்கோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் லிவர்பூலின் அன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து எந்த அணி அதிகமான அடித்துள்ளதோ அந்த அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
கடந்த சீசனில் சொந்த மண்ணில் கோப்பை வென்ற லிவர்பூல் அணி இம்முறையும் கம்பேக் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சரித்திரத்தில் முதல்முறையாக கால்பந்தாட்ட வீரர் கையில் லாரஸ் விருது!