கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டு போட்டிகளிலும் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்று பெருமை தேடித்தரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டியது அவசியாகும். அதற்கு அவர்கள் தகுதியானவர்களும் கூட. ஆனால் இன்னமும் பலர் அங்கீகரிக்கப்படாமல்தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் நாட்டிற்காக பல கோப்பைகளை வென்று தந்த போதிலும், தொடர்ந்து குடிசையில் வாழும் பிகாரைச் சேர்ந்த இந்திய கால்பந்து சகோதரிகளின் கதையைதான் பார்க்கப் போகிறோம். பிகார் மாநிலம் மேற்கு சாம்பர்மன் மாவட்டத்தில் உள்ள நார்கடியாஞ் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனி குமாரி, அவரது தங்கை அஷு குமாரி. இவர்களது தந்தை நேபாளத்தில் குதிரை வண்டி ஓட்டிவருகிறார்.
![athletes-who-brought-honour-to-the-nation-forced-to-live-in-a-hut](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7285127_339_7285127_1590054081233.png)
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சோனி குமாரிக்கு கால்பந்து விளையாட்டை கற்றுக்கொள்வதற்கு அது தடையாக இருந்ததில்லை என அவரது பயிற்சியாளர் சுனில் வர்மா தெரிவிக்கிறார். கிழிந்த சட்டை, பூட்ஸ்களுடனும்தான் சோனி குமாரி பயிற்சிபெற்றுவந்தார்.
![athletes-who-brought-honour-to-the-nation-forced-to-live-in-a-hut](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/spl-bh-bet-icon-footbaler-pkg-7204108_19052020130452_1905f_01086_302.jpg)
கால்பந்தில் அதீத திறன் கொண்ட இவருக்கு அரசாங்கம் உதவி செய்ய முன்வரவில்லை. இருப்பினும் பல தடைகளை வென்று தனது திறமையால் அவர் 2013இல் யு14 மகளிர் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி அந்தத் தொடரையும் வென்றது.
அதன் பலனாக, சோனி குமாரி யு14 மகளிர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் சோனி குமாரி இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடிவர, அவரது சகோதரி அஷூ குமாரி தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிவருகிறார்.
![athletes-who-brought-honour-to-the-nation-forced-to-live-in-a-hut](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/spl-bh-bet-icon-footbaler-pkg-7204108_19052020130447_1905f_01086_1097.jpg)
இருவருக்கும் ஒரேயொரு ஆசைதான். தனது சொந்த கிராமத்தில் குடிசையில் வாழ்வதற்கு மாறாக ஓர் அழகான வீட்டைக் கட்டி வாழ வேண்டும் என்பதுதான். ஆனால், அரசாங்காத்தின் அலட்சிய போக்கால் இவர்களது கனவு சிதைந்தது மட்டுமில்லாமல், குடிசையில் தொடர்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு உதவுமாறு சோனி குமாரியும், அஷு குமாரியும் தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இவர்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி கொடுக்காததால், சொந்த வீட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்த சோனி குமாரி, தனது சகோதரி, தாயையும் குடிசையில் விட்டு திருமணம் செய்துக் கொண்டார்.
![athletes-who-brought-honour-to-the-nation-forced-to-live-in-a-hut](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7270864_player9.jpg)
"இவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக மாவட்ட நிர்வாகம் மட்டுமே உத்தரவாதம் தந்தாலும், வீடு கட்டித் தரவில்லை. அரசாங்கத்திடம் உதவி கேட்டுக்கேட்டு இவர்களும் சோர்வடைந்துள்ளனர். நாட்டிற்காக பல கோப்பைகளை வென்று புகழ் தேடித் தந்த இவர்களது பிரச்னைகளை பற்றி அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பும் கண்டுக்கொள்ளாமல் அலட்சிய போக்கில்தான் இருக்கிறது” என சுனில் வர்மா தெரிவித்துள்ளார்.
இவர்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் இவர்களுக்கு அரசு சார்பாக எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஹாக்கி பிதாமகன் தயான் சந்த்தை மறந்த இந்தியா!