ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2019இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்தத் தொடரை கத்தார் அணி வென்றது. இதைத்தொடர்ந்து, 2023இல் இந்த தொடர் சீனாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், 2027இல் ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தொடரை நடத்த ஏற்கனவே ஈரான், கத்தார், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்து இருந்தன.
தற்போது அவர்களுடன் இந்த தொடரை நடத்த இந்தியாவும் இணைந்துள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் கத்தார், (1988,2011) ஈரான் (1968,1976) ஆகிய நாடுகள் தலா இரு முறை இந்தத் தொடரை நடத்தியுள்ளது.
அதில் தனது சொந்த மண்ணில் இருமுறையும் தொடரை நடத்திய ஈரான் சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், “ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் சார்பாக தொடரை நடத்த ஆர்வம் காட்டிய ஐந்து நாடுகளுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அதன் தலைவர் ஷைக் சல்மான் பின் தெரிவித்துள்ளார்.
மேலும், “விரைவில் இந்தத் தொடரை நடத்துவதற்கான நாடு தேர்ந்தெடுக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.