இத்தாலியில் 2019-20 சீசனுக்கான சீரி ஏ கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மிலண் நகரில் உள்ள சான் சிரோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் யுவென்டஸ் அணி, ஏசி மிலண் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. இதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் யுவென்டஸ் அணியின் நடுக்கள வீரர் அட்ரியன் ரபியாட் ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் 53ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ யுவென்டஸ் இரண்டாவது கோல் அடித்தார்.
இரண்டு கோல் பின்தங்கிய நிலையில் இருந்த ஏசி மிலண் அணி அடுத்தடுத்து நான்கு கோல் அடித்து யுவென்டஸ் அணியை அப்செட் செய்தது. ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் ஸ்லாத்தான் இப்ராஹிமோவிச் பெனால்டி கிக் மூலம் ஏசி மிலண் அணியின் முதல் கோல் அடித்தார். பின் ஃபிராங்க் கெஸ்ஸி, லியோ, ரெபிக் ஆகியோர் முறையே ஆட்டத்தின் 66,67,80ஆவது நிமிடங்களில் கோல் அடித்தனர்.
இறுதியில் ஏசி மிலண் அணி 4-2 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஏசி மிலண் அணி 31 போட்டிகளில் 49 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. மறுமுனையில் யுவென்டஸ் அணி 31 போட்டிகளில் 75 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.