நடப்பு சீசனுக்கான (2019-20) இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் (ஜூலை 23) இந்த தொடரில் 37 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 26 தேதி நடைபெறும் கடைசி சுற்று ஆட்டங்களுடன் இந்த சீசன் முடியவுள்ளன.
இந்நிலையில் அடுத்த சீசனுக்கான (2020-21) பிரீமியர் லீக் தொடர் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரீமியர் லீக் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 சீசனை வரும் 12ஆம் தேதி தொடங்க பிரீமியர் லீக் தொடரின் அனைத்து பங்குதாரர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் 2020-21 சீசன் மே 23ஆம் தேதி முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த சீசனுக்கான அட்டவணைகள் குறித்து பிரிமியர் லீக் அறிவிக்கவில்லை.
இதனிடையே, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற லிவர்பூல் அணி நேற்றைய போட்டியில் செல்சீ அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டி முடிந்த பிறகு லிவர்பூல் அணிக்கு பிரீமியர் லீக் கோப்பை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.