உலகளவில் சிறந்த கால்பந்து வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 1956ஆம் ஆண்டிலிருந்து பலான் டி ஆர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கம். ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் கால்பந்து அணிகளின் கேப்டன், கால்பந்து விளையாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 180 நபர்கள் கொண்ட நடுவர் குழுவின் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து அதிக புள்ளிகளைப் பெற்ற வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரத்து செய்யப்பட்டன. தொற்றின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதால், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பாவில் அந்தந்த நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லீக் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் விளைவாக, இந்த ஆண்டு இறுதியில் வழங்கப்படவிருந்த சிறந்த வீரருக்கான பலான் டி ஆர் விருது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இம்முறை யாருக்கும் விருது வழங்கப்படாது என பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் 1956ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டிருந்த இந்த விருது தற்போது முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குக்குப் பிறகு ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டதால், அதனைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான இவ்விருதை பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஆறாவது முறையாகத் தட்டிச் சென்றார். இதன் மூலம் இது விருதை ஆறு முறை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இவ்விருதை யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஐந்து முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.