இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, ஒடிசா எஃப்சி அணியுடன் மோதியது. ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ஒடிசா வீரர் ரானா காராமி பந்தைத் தடுக்க முயன்று அது செல்ஃப் கோலாக மாறியது. இதனால், ஜாம்ஷெட்பூர் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, 35ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் முன்கள வீரர் பிகாஷ் ஜைரூ ஃபவுல் செய்ததால் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் வழங்கினார். இதனால், ஜாம்ஷெட்பூர் அணி 10 பேர் கொண்ட அணியுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஒடிசா அணி அட்டாக்கிங் முறையில் விளையாடியது. இதன் பலனாக, அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் அரிடேன் கோல் அடித்ததால், முதல் பாதி முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 85ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் செர்ஜியோ காஸ்டெல் சிறப்பான முறையில் கோல் அடித்தார். இறுதியில், ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி, எஃப்சி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.