டவுன்ஸ்வில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று (செப். 3) அதிகாலை நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை கைப்பற்றியிருந்தது. இதனால், ஆறுதல் போட்டியாக பார்க்கப்பட்டது.
டவுன்வில்லி நகரில் உள்ள டோனி அயர்லாந்து மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பந்துவீச்சு முடிவு, ஜிம்பாப்வே அணிக்கு கைமேல் பலனை அளித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னரை தவிர வேறு பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், ஆஸ்திரேலிய அணி, 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு சுருண்டது. இதில், வார்னர் 94 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வார்னர், மேக்ஸ்வெல்லை தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை. மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியின் ஆஸ்திரேலியாவின் குறைந்த ஸ்கோர் இதுவே ஆகும். ஜிம்பாப்வே பந்துவீச்சில், சுழற்பந்துவீச்சாளர் ரியர் பர்ல் 3 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
142 ரன்கள் எளிதான இலக்கு என்றாலும் ஜிம்பாப்வே அணி, ரன்களை குவிக்க கடுமையாக திணறியது. இருப்பினும், கேப்டன் ரெஜிஸ் சக்கப்வாவின் பொறுப்பான ஆட்டத்தால், ஜிம்பாப்வே 39 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரெஜிஸ் 37 ரன்களையும், மருமணி 35 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஹசல்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரபல பாடகரின் பங்களாவில் ஓட்டல் தொடங்கும் விராட் கோலி