மெல்போர்ன்: சுழல் ஜாம்பவானும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனுமான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள பங்களா ஒன்றில் மார்ச் 5ஆம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அவருக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேன் வார்னேவின் உடல், பேங்காக்கில் இருந்து ஆஸ்திரேலியாவில் அவரின் சொந்த ஊரான மெல்போர்னுக்கு இன்று (மார்ச் 10) தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
மார்ச் 30 அன்று மெசிஜியில்...
ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 8.30 மணியளவில் (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) மெல்போர்ன் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் குவிந்த வார்னேவின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அவரின் உடல் மக்களின் பார்வைக்கு வைப்பதற்கு முன், வார்னேவின் குடும்பத்தினர் தனிப்பட்ட ரீதியில் இறுதி அஞ்சலி நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், மார்ச் 30ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ICC Women World Cup 2022: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து