இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. பெருந்தொற்றுக்கு மத்தியிலும் பார்வையாளர்களின்றி பலத்த பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், அதிகரித்துவரும் கரோனா பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வீரர்கள் பலர் விலகிவருகின்றனர்.
ஆர்சிபி அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆண்ட்ரூ டை ஆகியோரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வினும் விலகியுள்ளனர்.
அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்பட பலர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிறந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் விரைவில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு முழுமையாகத் தடைவிதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்புக் குழு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக மூடுவதற்கு முன்பு, வீரர்கள் திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 30 பேர் தற்போது இந்தியாவில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தனி விமானத்தில் ஆஸ்திரேலியா அழைத்துவருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்டீவ் ஸ்மித் டெல்லி அணிக்காகவும், டேவிட் வார்னர் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகிறார்கள். ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சுற்றுப்போட்டிகள், ப்ளேஆஃப், எலிமினேட்டர் சுற்று, இறுதிப்போட்டி இருப்பதால், வீரர்களின் விலகல் அணிகளுக்கு நிச்சயம் பின்னடைவுதான்.
இதையும் படிங்க: இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பிசியான நேரத்தில் மக்கள் நாயகனாக வலம்வரும் ஆஸி வீரர்!