ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளிலும், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், டி-20 தொடர் டிசம்பர் 4, 6, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இரு அணிகளும் 2008ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. அதில், இந்திய அணி ஐந்து வெற்றிகளும், மூன்று தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி இழந்தது. இந்நிலையில், டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் இன்று நடைபெறுகிறது.
டி-20 தொடரைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி பதிலடி தருமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் இந்த எதிர்ப்பார்ப்பிற்கு முக்கியக் காரணம், ஒருநாள் போட்டிக்கான அணியைவிட டி-20 தொடருக்கான அணி பலம் வாய்ந்ததாக இருப்பதுதான். டி-20 அணியில் வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நடராஜன் என பவுலிங்கில் கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் இடம்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன், டி-20 போட்டியிலும் இடம்பிடிக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை, ஒருநாள் தொடரில் ஐந்தாவது வீரராக களம் இறங்கிய கே.எல். ராகுல், டி-20 தொடரில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களம் காண்பார் என்று தெரிகிறது. வழக்கம்போல், மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவார்.
ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி இந்தத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் நம்பலாம்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக மார்னஸ் லாபுசான் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: சாதனை நாயகன் படைத்த மற்றொரு சாதனை!