தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று (ஜூலை 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிய முதல் ஆட்டம் தொடர் மழையால் ரத்து செய்யப்பட்டு, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
சென்னைக்கு டாஸ்
இதையடுத்து, தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் கௌசிக் காந்தி பந்துவீச முடிவு செய்தார்.
தொடர் விக்கெட்டுகள்
இதன் பலனாக, சென்னை அணி ஆட்டத்தின் இரண்டாம் பந்தில் இருந்தே தனது விக்கெட் வேட்டையை ஆரம்பித்துவிட்டது. சென்னை அணி பந்துவீச்சாளர்சதீஷ் அவரின் அனைத்து ஓவர்களிலும் விக்கெட் எடுத்து அசத்தினார். குறிப்பாக ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், 36 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திருப்பூர் தத்தளித்தது.
இதன்பின், ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது, அஸ்வின் கிறிஸ்ட் இருவரும் திருப்பூர் அணியில் இரட்டை இலக்க ரன்களை தொட்டனர் . 17ஆவது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோதே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
தொடர் மழை
மழை தொடர்ந்து பொழிந்த காரணத்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இரண்டு போட்டிகளும் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளித்துள்ளது.
திருப்பூர் அணியில், முகமது 10 (33) ரன்களிலும், அஸ்வின் கிறிஸ்ட் 23 (25) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணியில் சதீஷ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று (ஜூலை 21) நடைபெறும் மூன்றாவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கப்படும்.