டெல்லி : இந்தியா, நியூசிலாந்து (India vs New Zealand ) இடையேயான 3 டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று (நவ.19) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி நியூசிலாந்து வீரர்களான குப்தில், மிட்செல் ஆகியோர் ஒபனிங் இறங்கினார். அவர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்தனர். இந்த நிலையில், மார்டின் குப்தில் 31 ரன்னும் (15 பந்துகள் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்) மிட்செல் 31 ரன்னும் (28 பந்துகள் 3 பவுண்டரி) விளாசி அவுட் ஆகினர்.
அடுத்து மார்க் சப்மான் 21 ரன்னும், கிளீன் பிளிப்ஸ் 21 பந்துகளில் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் திம் சீஃபர்ட் (13), ஜேம்ஸ் நீஸம் (3), மிட்செல் சாண்ட்னர் (3) ரன்னும் எடுத்தனர்.
ஆடம் மில்னே அவுட் ஆகாமல் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். நிறைவாக, நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
புதுமுகம் ஹர்ஷல் (Harshal) பட்டேல் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி அபாரமாக ஆடினர். அதிரடி ஆட்டம் காட்டிய கே.எல். ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எதிர்முனையில் ரோகித் சர்மாவும் தன் பங்குக்கு 36 பந்துகளில் 55 ரன்கள் விளாசி அவுட் ஆனார். சூர்ய குமார் யாதவ் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
இந்நிலையில் இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் நின்றனர்.
நியூசிலாந்து தரப்பில் டீம் சௌதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.
இதையும் படிங்க : INDIA'S TEST SQUAD நியூசி., டெஸ்ட் தொடர்: கேப்டனாகும் ரஹானே; விராட்டுக்கு ஓய்வு!