வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 9) வங்கதேச ஷெர்-இ-பங்களா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
குறைந்த ரன்கள்
இந்த ஆட்டமும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக அமைந்தது. இதனால், முகமது நயீம் 23 ரன்கள் எடுத்ததே வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எல்லிஸ், டேன் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகார், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
மடிந்த ஆஸ்திரேலியா
அடுத்ததாக 123 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக டேன் கிறிஸ்டியன், கேப்டன் மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர்.
ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக வேட் 22 ரன்களும், பென் மெக்டெர்மாட் 17 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் 10 ரன்களைக்கூட தொடவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடரை வென்ற வங்கதேசம்
வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், முகமது சயிஃபுதின் 3 விக்கெட்டுகளையும், நசும் அகமது 2 விக்கெட்டுகளையும், மகமதுல்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.