கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகளுடன் தொடங்கிய நிலையில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று (செப். 9) கொழும்பு பிரேமதாசா மைதாத்தில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதிக் கொண்டன.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இலங்கை தொடக்க வீரர் நிசங்கா அதகளமாக ஆட்டத்தை துவக்கினார். அதே நேரத்தில் டஸ்கின் அஹமது பந்தில் எல்பிடபிள்யுவிற்கு அப்பீல் செய்தார். ஆனால் ரிவியூவில் அவுட் இல்லை என தெரிந்தது.
மற்றொரு இலங்கை அதிரடி வீரர் கருணரத்னேவும் அதிரடியாக துவக்கினார். முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹ்மூத் பந்தில் கருணரத்னே 18 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் 2 விக்கெட்டுக்கு நிசங்கா, குசல் மெண்டிஸ் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. இலங்கை 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிசங்கா 40 ரன்களுக்கு இஸ்லாம் பந்தில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு அடித்தளம் அமைத்தார். இந்த ஜோடி அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்து கொண்டது. மெண்டிஸ் அரைசதம் அடித்த நிலையில் சொரிஃபுல் பந்தில் அவுட்டானார். பின்னர் கள்மிறங்கிய அசலங்கா 10 ரன்களுக்கு நடையை கட்டினார்.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் சமரவிக்ரமா நிலைத்து நின்று ஆடினார். கீழ் வரிசை பேட்ஸ்மென்கள் தனஞ்செயா, ஷனகா, வெல்லலகே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சமரவிக்ரமா இன்னிங்ஸின் கடைசி பந்தில் 93 ரன்களுக்கு அவுட்டாக இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி அதிரடியான ஆட்டத்துடன் துவக்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மிராஸ், நயிம் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஸ் 28 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து நயிமும் அவுட்டானார்.
பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அனுபவ பேட்ஸ்மென்கள் லிட்டன் தாஸ் (3), சகீப் அல் ஹசன் (15) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். 4 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்த நிலையில் ரஹிம், ஹ்ரிதாய் ஜோடி சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் பொறுமையாக விளையாடியது.
155 ரன்கள் எடுத்த நிலையில் ரஹிம் 29 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஹொசைன் 5 ரன்களுக்கு அவுட்டானார். வங்கதேச அணிக்கு கடைசி நம்பிக்கையாக திகழ்ந்த ஹ்ரிதாய் 82 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து கலமிறங்கிய டஸ்கின் 1 ரன்னுக்கு அவுட்டாக இலங்கை அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியானது.
தொடக்கம் நன்றாக அமைந்தும் மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் வங்காள தேச அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக் கட்டுபோல் சரிந்தது. 48 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்காள தேச அணி இழந்து தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் வங்காள தேச அணியின் அடுத்த சுற்று கனவில் கல் விழுந்தது எனக் கூறலாம். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை பெரிது எதிர்பார்த்து உள்ள வங்காள தேசம், அந்த ஆட்டத்தின் முடிவில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இதையும் படிங்க : Ind Vs Pak Asia Cup 2023 Super 4 : வருணபகவான் கருணை இருக்குமா! இந்தியா - பாகிஸ்தான் மோதல்!