டெல்லி : உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதாலவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம் தான் என யூகங்கள் கிளம்பி உள்ளன. கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முகமது ஷமி இன்னும் பூரண குணமடையாத நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.
முன்னர் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் காயம் காரணமாக முகமது ஷமி விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமிக்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில் முகமது ஷமி இன்னும் பந்துவீச தொடங்கவில்லை எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் முழு உடல் தகுதியை நிரூபித்த பின்னரே முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் வீரருமான சூர்யகுமார் யாதவ் குடல் இறக்கம் பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவிற்கு விரைவில் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதற்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் பூரண குணம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. இந்திய அணிக்கு தூண்களாக விலகிய சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதையும் படிங்க : கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த கோவை ஆட்சியர்!