கொல்கத்தா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியின் அபாரமாக விளையாடிய விராட் கோலி 117 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள், சுப்மான் கில் 80 ரன்கள் குவித்தனர். அபாரமாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார்.
அதேபோல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓட்டுமொத்தமாக 701 ரன்கள் குவித்து உள்ள விராட் கோலி, ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் தெண்டுல்கரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையையும் முறியடித்து புது வரலாறு படைத்தார். இதுவரை, 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என அடித்து 13 ஆயிரத்து 794 ரன்களை குவித்து சாதனை படைத்து உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதம் விளாசிய விராட் கோலிக்கு பாலிவுட் முதல் கோலிவுட் என அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் விராட் கோலியின் சாதனை தனித்துவமானது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐயின் தலைவர் கங்குலி கூறுகையில், "இது ஒரு சிறந்த இன்னிங்ஸ் மற்றும் 50 சதங்கள் என்பது தனித்துவமானது. ஒருநாள் போட்டிகளில் இது மிகவும் அபாரமான ஒரு சாதனை. இந்த சாதனையை யாராவது உடைப்பார்களா என்றால் அது எனக்கு தெரியாது. ஆனால் இதற்கு நிறைய செய்ய வேண்டும். மேலும் விராட் கோலி இன்னும் முடிக்கவில்லை. அவர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா நன்றாக விளையாடி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயரும் சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்கட்டும் பிறகு இறுதிப் போட்டி குறித்து பேசலாம். ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே சரி. அணியில் ரோகித் உட்பட எல்லா வீரர்களுமே நன்றாக விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் வேகம் மற்றும் சுழல் என எல்லாமே சிறப்பாக இருக்கிறது" என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : "அன்று சிரித்தேன்.. இன்று பெருமைப்படுகிறேன்..." கோலி குறித்து சச்சின் உதிர்த்த வார்த்தைகள்!