டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 128 ஓவர்களில் 438 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 121, ரோஹித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ஜடேஜா 61, அஸ்வின் 56 ரன்களும் அடித்தனர்.
இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 115.4 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிராத்வைட் 75 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியா அணி 183 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 4வது நாளான நேற்று இந்தியா அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 38 ரன்களும், ரோஹித் சர்மா 44 பந்துகளில் 57 ரன்களும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து களம் கண்ட ஷுப்மேன் கில் 1 பவுண்டரியுடன் 29 ரன்களும், இஷான் கிஷன் 4 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்தனர். அப்போது இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிக்ளர் செய்யப்பட்டது.
பின்னர், 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பிராத்வைட் மற்றும் சந்தர்பால் ஆடி வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராத்வைட் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த கிர்க் மெக்கென்சி டக் அவுட் ஆனார்.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்துள்ளது. சந்தர்பால் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், பிளாக்வுட் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 2 விக்கெட்கள் எடுத்துள்ளார். மேலும், கடைசி நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மாவின் சாதனை: இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 30 டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 35 பந்துகளில் அரைசதத்தை எட்டி இருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிவேக அரை சதமாக பதிவாகியுள்ளது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் அரைசதம் அடித்ததே அவரது அதிவேக டெஸ்ட் அரைசதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Emerging Asia Cup 2023 Final : பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன்! 2வது முறையாக பாகிஸ்தான் ஏ சாம்பியன்!