அகமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பல் துறை பிரபலங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு படையெடுத்து உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 13) நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டின் ஹை லோல்டேஜ் என்று அழைக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண ஆவல் கொண்டு உள்ளனர்.
போட்டியை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். உலக கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்று உள்ளது. இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணி களமிறங்கும்.
அதேசமயம், 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி சாதனையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் மும்முரமாக உள்ளனர். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் முட்டிக் கொள்வதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அகமதாபாத் நகருக்கு படையெடுத்து உள்ளனர்.
மிகப்பெரிய மைதானமான ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரக் கூடிய வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு, நரேந்திர மோடி மைதானத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதற்காக குஜராத் முழுவதும் 6 ஆயிரம் போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மருத்துவக் குழுவினர், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
150 ஐபிஎஸ், அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக போக்குவரத்து வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், நகரில் முக்கிய போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பி பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : India vs Pakistan : இந்திய அணியில் சுப்மான் கில்? ரோகித் சர்மா பளீச்!