ஐதராபாத் : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் முறையாக விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 6வது இடத்தை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிடித்து உள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. கடந்த 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 131 ரன்கள், அதைத் தொடர்ந்து 14ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 63 பந்துகளில் 86 ரன்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளாசித் தள்ளினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறிய ரோகித் சர்மா 6வது இடத்தை பிடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 9வது இடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக ரோகித் சர்மா முன்னிலை பெற்று உள்ளார்.
இலங்கை (100 ரன்), ஆஸ்திரேலியா (109 ரன்) அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் 3 இடங்கள் முன்னேறி தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளார். அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வீரர் ரஸ்ஸி வேன் டர் துஸ்சென் 4வது இடத்தில் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குயின்டன் டி காக் (20 ரன்) கூடுதலாக ரன் குவித்து இருந்தால் டாப் 2 வீரர்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கக் கூடும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கு களமிறங்கி 78 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 இடங்கள் முன்னேறி 27வது இடத்தை பிடித்து உள்ளார்.
அதேபோல் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் ரஹமன்னுல்லா குர்பாஸ் 19 இடங்கள் முன்னேறி 18வது இடத்தை பிடித்து உள்ளார். மற்றபடி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைந்து கடந்த 14ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய சுப்மான் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இருப்பினும் தரவரிசையில் மாற்றம் ஏதுமின்றி 2வது இடத்தில் தொடர்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.
ஒரு புள்ளி வித்தியாசத்தில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். கடந்த வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 200வது விக்கெட்டை வீழ்த்திய ட்ரென்ட் பவுல்ட், அந்த ஆட்டத்தில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் 2 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்து உள்ளார். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் 7 இடங்கள் முன்னேறி ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானுடன் இணைந்து 5வது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 7 இடங்கள் முன்னேறி தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடாவுடன் 14வது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி 6 இடங்கள் முன்னேறி 16வது இடத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 9வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : அஸ்வின், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் இடம் கேள்விக்குறி தான்? - பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே!