கொல்கத்தா: நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் தோற்றாலும், தொடர் முழுவதும் அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக ரோகித் சர்மா அணியை வழிநடத்தியதிலும் சரி, அவரது பேட்டிங்கிலும் சரி தனது பணியை சிறக்க செய்தார்.
உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிப்பட்டுள்ளது. அதேபோல் வர இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிகளிலும் இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைந்தது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை வரையிலாவது ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்திட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்த ஓய்வானது மிகவும் அவசியமான ஒன்று. அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு இந்த ஓய்வு உதவியாக இருக்கும். மேலும், அனைத்து விதமான வடிவங்களிலும் ரோகித் சர்மா விளையாடுவதற்கு தயாரான பிறகு, அவர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திட வேண்டும். ஏன்னென்றால், அவர் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர்கள். அவர்கள் உலகக் கோப்பையில் எவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். குறைந்தது ரோகித் 2024 டி20 உலகக் கோப்பை வரையிலாவது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: "அடுத்த 20 ஆண்டுகளில் ஐபிஎல் ஊடக உரிமம் 50 பில்லியன் டாலரை எட்டும்" - ஐபிஎல் தலைவர் அருண் துமால்!