மும்பை: பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ யின் 91ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், பிசிசிஐ யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயதான ரோஜர் பின்னி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜர் பின்னி,
”பிசிசிஐ தலைவராக முதலில் 2 விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். முதலில், வீரர்களுக்கு ஏற்படும் காயங்களைத் தடுப்பது. இரண்டாவதாக, நாட்டில் உள்ள ஆடுகளங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
பின்னி இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 72 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் டெஸ்டில் 47 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
1983 உலகக் கோப்பையில் 18 விக்கெட்டுகளுடன் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது - ஜெய் ஷா