டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் சிகிச்சைகளுக்காக டேராடூன் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்த வகையில் தனி விமானம் மூலம் டேராடூனில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டார். அவருடன் மருத்துவக்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவரது உடல்நிலை சீராகவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக டெல்லி அல்லது மும்பைக்கு மாற்றப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்தது.
அந்த வகையில், இன்று (ஜனவரி 4) மும்பைக்கு புறப்பட்டுள்ளார். மும்பையில் அவருக்கு புகழ்பெற்ற எலும்பியல் மருத்துவர் டின்ஷா பர்திவாலாவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கடந்த வாரம் ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதிய விபத்து ஏற்பட்டது. இதனால் அவருக்கு நெற்றி, முழங்கால், கணுக்கால், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன. அதன்பின் வாகனவோட்டிகளால் அவர் மீட்கப்பட்டு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அவர், விமானம் மூலம் மும்பை வந்த ரிஷப் பந்த், மும்பையில் உள்ள ஹெச். என். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 1st T20 கிரிக்கெட் - இலங்கையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி...