டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இன்று (ஜன. 28) வெளியிட்டுள்ள அறிக்கையில்," ரஞ்சி கோப்பை தொடரை இரு கட்டங்களாக நடத்துவது என்று வாரியம் முடிவெடுத்துள்ளது.
முதல் கட்டத்தில், அனைத்து லீக் ஆட்டங்களை நடத்தி, அடுத்த கட்டமாக ஜூன் மாதத்தில் நாக்-அவுட் சுற்றுப்போட்டிகளை நடைபெறும். கரோனா பெருந்தொற்றால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு என்னுடைய குழு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மிகுந்த எதிர்பார்ப்புள்ள சிவப்பு பந்து தொடரையும் (Red Ball Series) உறுதிசெய்கிறது.
'இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு'
மிகவும் மதிப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடர், ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் திறமைசாலிகளை வழங்கிவரும் தொடர். அதனால், இந்த தொடரை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரஞ்சி கோப்பை இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு என்றும் அதை புறக்கணிக்கக் கூடாது என்றும் குறிபிட்டிருந்தார்.
ஐபிஎல்-க்கு முன் ரஞ்சி
ஏனென்றால், ரஞ்சி கோப்பை தொடரும், கலோனல் சிகே நாயுடு கோப்பை தொடரும் இந்த மாதத்தில் நடந்த திட்டமிருந்தது. ஆனால், நாட்டில் கரோனா தொற்று பரவலை முன்னிட்டு ரஞ்சி கோப்பை தொடரை ஒத்திவைப்பதாக ஜனவரி 4ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.
ஐபிஎல் தொடர் இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என ஜெய் ஷா முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், ரஞ்சி கோப்பை முதல் கட்ட போட்டிகள் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஞ்சி கோப்பை கரோனா தொற்று காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: AUS Open 2022: துள்ளிக் குதிக்கும் நடால்; பைனலுக்கு முன்னேற்றம்!