இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேசிய டி20 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் கராச்சி ஒயிட்ஸ், லாகூர் ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் கராச்சியில் நடைபெற்றது.
இதில் கராச்சி ஒயிட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் அசம் கான், தனது பேட்டில் பாலஸ்தீனத்தின் கொடியை ஒட்டியிருந்தார். ஐசிசி விதிகளை மீறியதாக கள நடுவர் அவருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். இருப்பினும், அசம் கான் அதை பொருட்படுத்தாமல் விளையாடியதாக கூறப்படுகிறது. முன்னர் நடந்த போட்டிகளிலும் அவர் இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஐசிசியின் ஆடை மற்றும் உபகரண விதிகளை மீறியதற்காக, விக்கெட் கீப்பர் அசம் கானுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனுமான மொயின் கானின் மகன் தான் இந்த அசம் கான்.
உள்ளூர் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், லாகூர் ப்ளூஸ் மற்றும் கராச்சி ஒயிட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லாகூர் ப்ளூஸ் அணி 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் 35 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.
பின்னர் ஆடிய கராச்சி அணி 154 ரன்களை மட்டுமே எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இதேபோன்ற சம்பவத்தில், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மாட்டிக் கொண்டார். இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிர்க்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். அது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : தொடரை வெல்லுமா இந்தியா? தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆஸ்திரேலியா?