அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (அக். 5) தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன.
இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும், அதில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும். முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் தரமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலாவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி இருந்தன.
அந்த ஆட்டம் இரு அணி வீரர்களுக்கும் மறக்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது. அந்த இறுதிப் போட்டியின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அன்றைய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிவடைந்ததை அடுத்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிவடைந்ததால் அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உலக கோப்பை வழங்கப்பட்டது.
அதற்கு இந்த முறை நியூசிலாந்து அணி நிச்சயம் பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் களம் இறங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயத்தில் இருந்து அவர் பூரண குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் தான்.
அவருக்கு பதிலாக டாம் லாதம் அணியை வழிநடத்திச் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து அணியிலும் பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனால், ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து அணியில் ஜானி பெர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர். இவர்கள் மூன்று பேரையும் விரைவில் வெளியேற்றும் பட்சத்தில் நியூசிலாந்து அணி குறைந்த ஸ்கோரை இலக்காக பெற முடியும்.
கடந்த இரண்டு உலக கோப்பைகளில் செய்த தவறுகளுக்கு நடப்பு உலக கோப்பையில் பிராயச்சித்தமாக மகுடம் சூட நியூசிலாந்து அணி நிச்சயம் முயற்சிக்கும். அதனால் தொடரின் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இதையும் படிங்க : ICC World Cup 2023: உலக கோப்பை கிரிக்கெட்டில் விதிமுறைகள் மாற்றமா? அப்படி என்ன மாறி இருக்கு தெரியுமா?