பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து 11.5வது ஓவரில் சுப்மன் கில் தனது ஆட்டத்தை இழந்தார். பின், அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 54 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து 17.4வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர். இந்நிலையில், விராட் கோலி 28.4வது ஓவரில் 51 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை இழந்தார். பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் தனது அதிரடி ஆட்டத்தால், இந்திய அணிக்கு ரன்களை குவித்தார். ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணியில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவிந்தன.
கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து, 102 ரன்கள் எடுத்து தனது சதத்தை பதிவு செய்தார். அதன்பின், 49.5வது ஓவரில் தனது ஆட்டத்தை இழந்தார். இதற்கிடையில் ஸ்ரேயஸ் ஐயர் 94 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ரோகித் சர்மா 63 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் வேகமாக சதத்தை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
தற்போது ரோகித் சர்மா சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்து 62 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த முதல் அணி, இந்திய அணி ஆகும்.
இது குறித்து கே.எல். ராகுல் கூறியதாவது, “இந்திய அணியில் ஐந்தாவதாக களமிறங்கி நம்பிக்கையைப் பெறுவது கடினமான ஒன்றாகும். கடைசி ஓவரிலும் என்னால் சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது. முதல் எட்டு இன்னிங்ஸ்ஸில் என்னுடைய ஸ்கோர் 50க்கும் மேல் ஆகும்.
கடைசி பத்து ஓவர்களில் விளையாடுவது கடினம். இது ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, கடைசி பத்து ஓவரில் கடினமாக விளையாடி அதிக ரன்கள் எடுக்க வேண்டும். நான், என்னால் முடிந்த வரை விளையாடி ரன்களைச் சேர்த்தேன். ஒவ்வொருவருக்கும் விளையாட்டைப் பற்றி ஒவ்வொரு திட்டம் உள்ளது. அதன்படி தெளிவாக விளையாட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:நெதர்லாந்து எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி - உலகக் கோப்பையில் தொடர்ந்து 9 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா!