இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 20) டிரினிடாடில் உள்ள போர்ட் ஃஆப் ஸ்பெயினில் தொடங்கியது. இப்போட்டி இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் 100வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் இப்போட்டியில் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் தனது முதல் போட்டியில் களமிறங்குகிறார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, மறுபுறம் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரோகித் சர்மா 143 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாரிகன் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ரஹானேவும் 8 ரன்களில் அவுட்டாக இந்திய அணி 182 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து சற்று தடுமாற தொடங்கியது. இந்த நேரத்தில் ஜடேஜா, கோலி ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.
இதையும் படிங்க: MS Dhoni Bike Collection: தோனியின் பண்ணை வீட்டில் உள்ள பைக்குகள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
இந்த ஜோடி பொறுமையாக ரன்கள் சேர்த்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பத்திலிருந்து விராட் கோலி அதிரடியாக ஆடினார். கேப்ரியல் பந்தில் பவுண்டரி அடித்து விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 29வது சதத்தை அடித்தார். விராத் கோலி விளையாடும் 500வது சர்வதேச போட்டியில் 29 ஆவது சதத்தை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் விராத் கோலி வெளிநாட்டில் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும்.
அதே ஓவரில் ஜடேஜா தனது அரைசதத்தை அடித்தார். கோலி 206 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். ஜடேஜா ரோச் பந்தில் ஜோஷ்வாவிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்களுக்கு அவுட்டானார். உணவு இடைவெளியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அஷ்வின் 6 ரன்களுடனும், இஷான் கிஷன் 19 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டிஸ் சார்பில் கேப்ரியல் அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Ashes Test: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் சேர்ப்பு - ஜாக் கிராலி சதம்!