ஐசிசி கடந்த 2021ஆம் ஆண்டு முதல், மாதம்தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை கெளரவப்படுத்தும் விதமாக "பிளேயர் ஆப் தி மன்த்" (Player of the Month) விருதை வழங்கி வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் வீரர் வீராங்கனைகளில், தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ரசிகர்கள் வாக்களிப்பார்கள். அந்த வாக்கெடுப்பின்படி வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான "பிளேயர் ஆப் தி மன்த்" விருதுக்கு, வீரர் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மகளிர் பிரிவில் மூன்று பேரும், ஆடவர் பிரிவில் மூன்று பேரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் பிரிவில், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக, இந்திய கிரிக்கெட் வீரராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், ஆல்ரவுண்டராகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் நிகழ்பவர் ஜெமிமா. காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய ஜோடியான பெத் மூனி மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஆடவர் பிரிவில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.