அகமதாபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது. இந்நிலையில், இப்போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நடப்பு சீசனில் விளையாடியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு சிறந்த அணிகளில் விளையாடி உள்ளேன். 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆஃப்கள், 8 இறுதிப்போட்டிகள், 5 கோப்பைகள். 6வது கோப்பை இன்று இரவு கிடைக்கும் என நம்புகிறேன். இது ஒரு நல்ல பயணம்.
இந்த ஆட்டம், ஐபிஎல்-ல் எனது கடைசி ஆட்டமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். மிக மகிழ்ச்சியாக இந்த தொடரில் விளையாடினேன். அனைவருக்கும் நன்றி. யூ டர்ன் இல்லை" என குறிப்பிட்டு உள்ளார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் அறிமுகமானார் அம்பதி ராயுடு. 2013ஆம் ஆண்டு அவர் மும்பை அணியில் இருந்த போது கோப்பையை வென்றது. 2015, 2017ஆம் ஆண்டுகளிலும் அம்பதி ராயுடு மும்பை அணியில் இருந்த போது அந்த அணி ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.
பின்னர் 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்கு அவர் சென்ற போது, அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. 2021ஆம் ஆண்டு ராயுடு சென்னை அணியில் இருந்த போது, சிஎஸ்கே அணி கோப்பையை தட்டிச்சென்றது. 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, 4,329 ரன்களை குவித்து உள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 22 அரை சதங்கள் அடங்கும்.