அகமதாபாத்: 15ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், டி.ஒய். பாட்டீல் மைதானம், புனே எம்சிஏ மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றன.
லீக் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தேர்வாகின. குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும், குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி ஆகியவை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றன. இறுதிப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மைதானத்திற்கு வந்து கண்டுகளித்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில், குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தனது அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடர் முழுவதும் குஜராத் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சிறப்பாக விளையாடியதே கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.
இந்நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வீரர்கள் நேற்று (மே 30) மாலை அகமதாபாத்தில் திறந்தவெளி பேருந்தில் ஐபிஎல் கோப்பையுடன் ஊர்வலம் வந்தனர். அவர்களுக்கு குஜராத் மக்கள் அமோக வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினர். பேருந்தில் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், ரஷித் கான், டேவிட் மில்லர், லோக்கி பெர்குசன் உள்ளிட்டோர்களும், குஜராத் அணி வீரர்களின் குழந்தைகளும் பேருந்தில் இருந்தனர்.
ஹர்திக் பாண்டியா கையில் ஐபிஎல் கோப்பையுடன் வலம் வந்த நிலையில், அவர் குஜராத் டைட்டன்ஸின் ஜெர்ஸியையும் மக்களுக்கு வழங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்ற இந்த ஊர்வலத்திற்கு, காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கினர். இந்த ஊர்வலத்தின் போது சட்டவிரோதமாக ட்ரோன்களை பறக்கவிட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஊர்வலம் உஸ்மான்பூரில் இருந்து எல்லிஸ் பாலம் வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதிநேரத்தில் உஸ்மான்பூர் - வருமான வரித்துறை அலுவலகம் வரை ஊர்வலம் சென்றது. மேலும், குஜராத் டைடன்ஸ் அணிக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022: 6 விருதுகளை அள்ளிய ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர்!