அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் முதலாவது லீக் ஆட்டம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார். அதேபோல மொயீன் அலி 17 பந்துகளுக்கு 23 ரன்களையும், சிவம் துபே 18 பந்துகளுக்கு 19 ரன்களையும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் கேப்டன் தோனி இறுதியாக களமிறங்கியதால் 7 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 14 ரன்களை எடுத்தார். மறுபுறம் பந்துவீச்சில் குஜராத் அணியின் ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டை எடுத்திருந்தார்.
அந்த வகையில், 179 ரன்கள் வெற்றி இலக்குடன் குஜராத் அணியின் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சாஹா, சுப்மான் கில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், 3.5 ஓவர்கள் முடிவில் விருத்திமான் சாஹா, சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
3ஆவதாக களமிறங்கிய சாய் சுதர்சனும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஓவரில் விக்கெட்டானார். ஆனால், சுப்மன் கில் விக்கெட் இழக்காமல் 11.2 ஓவர்கள் முடிவில் 30 பந்துகளுக்கு 50 ரன்களை எடுத்தார். இவருடன் 4ஆவதாக களமிறங்கினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இவர் வந்த உடன் ஆட்டம் சூடு பிடித்தது. 20வது ஓவர் வரை நீடித்த இப்போட்டியில் இறுதி ஓவரில் குஜராத் அணி இலக்கை எட்டியது. தோல்வி கண்டாலும் 40 வயதான தோனி பவுண்டரி மற்றும் சிக்சரை பறக்கவிட்டார். தோல்வி புதிது அல்ல என்றாலும் சென்னை ரசிகர்கள் வின்டேஜ் தோனியின் தரிசனத்தால் திருப்தியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணி களம் காணும்.. முழு அட்டவணை..