லண்டன்: இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 வாரங்கள் வரை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பென் ஸ்டோக்ஸ் 12 வாரம் வரை கிரிக்கெட் விளையாட மாட்டார். காயம் அடைந்துள்ள அவருக்கு வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள பென் ஸ்டோக்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் அடித்த பந்தை கேட்ச் பிடித்தபோது இடது கை ஆள்காட்டி விரலில் காயமுற்றார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு எக்ரே, சிடி ஸ்கேன் பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் காயம் குணமாவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 12 வாரம் வரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, காயம் அடைந்த பின்னர் ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்தது. தற்போது இந்தியாவில் இருக்கும் ஸ்டோக்ஸ் இன்று (ஏப். 17) விமானம் மூலம் இங்கிலாந்து திரும்புகிறார்.
இதையும் படிங்க: IPL 2021 RR vs DC: 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!