லக்னோ: ஐபிஎல் 2023 போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டூ பிளசிஸ் 44, விராட் கோலி 31 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. அதேநேரம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நவீன் - உல் - ஹா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷோனி மற்றும் அமித் மிஷ்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கிருஷ்ணப்பா கெளதம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மற்ற அனைத்து வீரர்களும் பெங்களூரு அணியின் அபார பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, ஆல் அவுட் செய்து அசத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகள் உடன் 5வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 புள்ளிகள் உடன் 3வது இடத்திலும் உள்ளன.
முன்னதாக, 2ஆம் இன்னிங்ஸின் 17வது ஓவரில் லக்னோ அணியின் வீரர் நவீன் - உல் - ஹாவுக்கும் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சக வீரர்களும் நடுவரும் வந்து சமாதானப்படுத்தினர். பின்னர், பெங்களூரு அணி வெற்றி பெற்ற பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொண்டனர்.
அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காம்பீருக்கும் விராட் கோலிக்கும், மேலும் விராட் கோலிக்கும் நவீனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து பெங்களூரு அணியின் டூ பிளசிஸ் விராட் கோலியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். அது மட்டுமல்லாமல், விராட் கோலி தனது ரசிகர்களைப் பார்த்து முத்தமிட்டார்.
மேலும், நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பிளேயிங் 11இல், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூராண் (விக்கெட் கீப்பர்), கெயில் மாயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்னல் பாண்டியா, கிருஷ்ணப்பா கெளதம், ரவி பிஷோனி, நவீன் - உல் -ஹா, அமித் மிஷ்ரா மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் விளையாடினர்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11இல், டூ பிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனூஜ் ராஜ்வாட், கிளான் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வானிண்டு ஹசரங்கா, கார்ன் ஷர்மா, முகம்மது சிராஜ் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் களம் ஆடினர்.
இதையும் படிங்க: RCB vs LSG: 'கண்ணன் தேவன் டீ புடி'.. பெங்களூரு அணி இந்த சீசனில் எப்படி?